பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா?… அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்!

மகளிருக்கு நகர்ப்புற பேருந்துகளில் பயணிக்க இலவசம் என அறிவிக்கப்பட்ட பிறகு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லவன் சாலை மாநகர போக்குவரத்து கழக மத்திய பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆப்ரகாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 16 பணிமனைகள் மேம்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அடையர், திருவான்மியூர் மந்தவெளி, தாம்பரம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், வில்லிவாக்கம், சென்ட்ரல், வள்ளலார்நகர், திருவொற்றியூர், வியாசர்பாடி உள்ளிட்ட 16 பணிமனைகளை மேம்படுத்த உள்ளோம். வணிக வளாகம், உட்கட்டமைப்பு என வருவாய் பெரும் வகையில் கட்டமைக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் அதிகரித்த பிறக்கு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் வாரநாட்களில் சராசரியாக 7.5 லட்சம் பேரும் திங்கள்கிழமை சராசரியாக 8 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர் என தெரிவித்த அவர், இதன் மூலம் 1450 கோடி மகளிர் இலவச பயணத்தால் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும் தற்போது பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கிறது என தெரிவித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்,
அரசு பேருந்துகளில் நாள் ஒன்றிற்கு 1 கோடியே 15 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்கிறனர். டீசலுக்கான மானியம் அரசு வழங்கினாலும் தொடர்ந்து டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்து துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

மேலும், பஸ் கட்டணத்தை தற்போது உயர்த்துவதற்கான எண்ணம் இல்லை என கூறிய அவர், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நிதிதுறையுடன் பேச்சுவார்த்தை குழு போடப்பட்டு , விரைவில் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *