பி.எஸ்.டி நிறுவனத்திற்கு இனி எந்த ஒப்பந்தமும் தரப்போவதில்லை

1,920 வீடுகளை கொண்ட 10 அடுக்கு மாடி கட்டிடத்தை புளியந்தோப்பு கே.பி பார்க் என்ற பகுதியில் தமிழ்நாடு குடிசை வாரியம் மூலம் கட்டப்பட்டது. கட்டிட வேலைகள் முடிந்து மக்கள் அங்கு குடியேறிய மக்கள், சுவர் பகுதியை கையில் தொட்டாலே பெயர்ந்து விழுவதாகவும், படிக்கட்டுகள் இடிந்து விழுவதாகவும் புகார்கள் தெரிவித்துவந்தனர். இந்த கட்டிடத்தை பி.எஸ்.டி. என்ற நிறுவனம் சுமார் ரூ.240 கோடி ரூபாய் செலவில் காட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது பல உயிர் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக, பி.எஸ்.டி. நிறுவனத்திடம் கேட்டபோது, கட்டிடம் கட்டி இரண்டு ஆண்டுகள் உபயோக படுத்தாமல் இருந்ததாலும், கொரோனா ஊரடங்கில் நோயாளிகளை தனிமைப்படுத்தி வைப்பதற்கான தற்காலிக மருத்துவமனையாக சென்னை மாநகராட்சி பயன்படுத்தியதாகவும், அவ்வாறு பயன்படுத்தும் போது மருத்துவ தளவாடங்களை படிக்கட்டுகள் வழியாக எடுத்துச் சென்ற போது சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

கட்டிடத்தின் உறுதித்தன்மை பற்றி ஆய்வு செய்யும் பொறுப்பு ஐஐடியிடம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார். கட்டிடத்தை ஆய்வு செய்த ஐஐடி குழு இந்த கட்டிடம் மக்கள் வாழ தகுதியற்றது என்று அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், சென்னை கபாலீஸ்வரர் கோவிலை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் “இனி பி.எஸ்.டி நிறுவனத்திற்கு எந்த ஒப்பந்தமும் தரப்போவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது.” என்று தெரிவித்தார்.