மாணவர்களுக்கு பரவி வரும் சாதி என்னும் புற்றுநோய்

நவீன உலகம் என்று சொல்லக்கூடிய இன்றைய காலத்திலும் சாதி என்னும் கொடிய நோய் மாணவர்களிடம் பரவிருக்கிறது. தன் பெற்றோர்களிடமிருந்தோ, படம் நடத்தும் ஆசிரியர்களிடமிருந்தோ, உறவினர்களிடமிருந்தோ மாணவர்கள் கற்று கொள்கிறார்கள் . அடுத்த தலைமுறையில் சாதி இருக்காது என்பன போன்ற வாசகங்கள் அனைத்தும் நீர்த்து போய் பண்டைய காலத்தில் நடந்தது போலவே மீண்டும் சாதி சண்டைகள் சாலையில் அரங்கேறி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்திலுள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவர்கள், பள்ளி முடிந்து செல்லும் போது சாதி சண்டை ஈடுபட்டுள்ளனர் . இந்த சண்டையில் ஒவ்வொரு மாணவரும் ஆக்ரோஷமாக தாக்கி கொண்டனர். இந்த சண்டை காவல் நிலையத்துக்கு அருகிலே நடந்துள்ளது. இது குறித்து காவலர்கள் அந்த பள்ளியில் விசாரிக்கையில் வகுப்பு மேஜையின் மீது தன் சாதி பெயரை எழுதி வைப்பது,அதை மற்றொரு வகுப்பினர் அழிப்பது போன்ற செயல்கள் நடந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இத்தகைய செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் பள்ளி நிர்வாகம் அந்த மாணவர்களை கண்டிக்கவில்லை. மாணவர்களின் இந்த செயல்களை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சண்டையில் ஈடுபட்ட 9 மாணவர்களின் பெற்றோர்களின் அழைத்து அவர்களிடமே டி.சி கொடுத்துள்ளதாக தெரிவித்தனர் . மேலும், இது போல சம்பவம் நடக்காமல் பார்த்து கொள்வதாகவும் கூறினார்.
கடந்த 2019-ம் ஆண்டு இதே பள்ளி மாணவர்கள் சாதி சண்டையில் ஈடுபட்டனர். சண்டையில் ஈடுபட்ட மாணவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து 1330 திருக்குறளை எழுதி கொடுத்துவிட்டு போகும்படி அன்றைய உதவி காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் உத்தரவிட்டார். மேலும் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கையும் செய்து அனுப்பினார்.
கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிறைய சாதி கொலைகள் நடந்து வருகின்றது. அந்த கொலைகளில் பிடிபட்டவர்கள் வயது 18 முதல் 20 வயது தான். தன் சாதி கொடியிலுள்ள நிறத்தை கையில் கயிறாக கட்டுவது. வாட்ஸ் ஆப்பில் தன சாதி கொடி சின்னத்தை காட்சி படமாக வைப்பது என சாதி ரீதியான போக்கு அதிகமாகியுள்ளது. புற்றுநோயை ஆரம்ப காலத்திலே கண்டுபிடித்தல் அதை குணப்படுத்திவிடலாம் அதே போல இந்த சாதி விஷத்தையும் மாணவர்களின் சிறு வயதிலே கண்டுபிடித்து அதிலிருந்து அவர்களை வெளியில் கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால்தான் இனி வரும் தலைமுறைகள் சாதியின் தாக்கம் இல்லாமல் வாழ்வார்கள்.