பணத்தால் அலங்கரிக்கப்பட்ட வஞ்சியம்மன்!

கோவில் திருவிழாக்களின்போது அம்மனுக்கு அலங்காரம் செய்வது வழக்கம். பூமாலைகள் கொண்டு அம்மன் அலங்கரிக்கப்படுவது பல்வேறு கிராமங்களில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், வேலூர் காட்பாடியில் அம்மனுக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது காண்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிப்பாக கொரோனா நோயத் தொற்றில் இருந்து பொதுமக்கள் அனைவரும் விடுபெற வேண்டி இன்று கிராம தேவதை ஸ்ரீ வஞ்சி அம்மனுக்கு நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் 20 ரூபாய் 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் கோவிலின் வெளியே நின்றபடியே வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.