‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ அறிவிப்புப் பலகை வெளியீடு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்பது, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், தமிழகக் கோயில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட உள்ள அறிவிப்புப் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு (ஆக. 03) வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அறிவிப்புப் பலகையில் அர்ச்சகர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும்.

இது தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு தன் ட்விட்டர் பக்கத்தில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தின் அறிவிப்புப் பலகையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (06.08.2021) அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் திருக்கோயில்களில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு, அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *