எதையும் செய்யத் துணியும் கர்நாடகா… எச்சரிக்கும் ராமதாஸ்

கர்நாடகாவின் முதல்வராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் முடிவு எப்போதும் மாறாது என அவர் கூறியுள்ளார். இதனால், மேக தாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு விழிப்புடன் இருக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு ஊடகங்களுக்கு அளித்த முதல் நேர்காணலிலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும்; அதற்கு அனுமதி பெறுவதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்திக்கவிருக்கிறேன் என்று பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒருவர், தமிழகத்துடனான உறவை வலுப்படுத்த முயல்வதற்கு மாறாக சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணையை கட்டிவிட வேண்டும் என்பதில் இதுவரை முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவும், இப்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் உறுதியாக உள்ளனர். மேகேதாட்டு அணையை கட்டுவதற்காக அறத்துக்கு மாறாக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதை தமிழக அரசு புரிந்து கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் அது தான் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மிகப்பெரிய அணையாக இருக்கும். தொடக்கத்தில் ரூ.5912 கோடி செலவில் 67.14 டி.எம்.சி கொள்ளளவில் மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு திட்டமிட்ட கர்நாடக அரசு, 2019-ஆம் ஆண்டில் அணைக்கான மதிப்பீட்டை ரூ.9,000 கோடியாக உயர்த்தியது. மேகேதாட்டு அணையின் கொள்ளளவும் 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டது. இது ஏற்கனவே கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவான 49.45 டி.எம்.சியை விட 42% அதிகம் ஆகும். இந்த அணையும் கட்டப்பட்டால் கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரப்பூர்வ கொள்ளளவு 184.57 டி.எம்.சியாக அதிகரிக்கும். நீர்நிலைகளை இணைத்து சட்டவிரோதமாக கர்நாடக அரசு சேமித்து வைத்துள்ள 40 டி.எம்.சி நீரையும் சேர்த்தால் மொத்தக் கொள்ளளவு 225 டி.எம்.சியாக அதிகரித்து விடும். அதன்பின் தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காது.

தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரை தடுப்பது 1892-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே செய்து கொள்ளப்ப்பட்ட ஒப்பந்தத்திற்கும், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கும் எதிரானது ஆகும். அதனால் மேகேதாட்டு அணைக்கு உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் அனுமதி அளிக்காது; அனுமதி அளிக்கவும் முடியாது. இதை உணர்ந்து கொண்ட கர்நாடக அரசு இப்போது புதிய தந்திரத்தை கையில் எடுத்துள்ளது. மேகேதாட்டு அணை பாசனத்திற்கான அணை இல்லை; பெங்களூர் மாநகரத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கான அணை என்பது தான் அந்த உத்தியாகும். கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை இந்தக் கருத்தை மீண்டும் கூறி உறுதி செய்திருக்கிறார். இதனடிப்படையில் தான் மத்திய அரசிடம் கர்நாடகம் அனுமதி கோரவுள்ளது.

தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியில் அணை கட்டுவதும் இரு மாநில ஒப்பந்தத்தின்படி சாத்தியமற்றது தான். ஆனால், அந்த அணை குடிநீர் தேவைக்கானது என்று வாதிட்டு, அதற்கு கர்நாடகம் அனுமதி பெற்று அணையையும் கட்டி முடித்து விட்டது. அதேபோன்று மேகேதாட்டு விவகாரத்தில் நடந்து விடக் கூடாது. பெங்களூர் மாநகரத்திற்கு காவிரி ஆதாரத்திலிருந்து இப்போதே தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதை உச்சநீதிமன்றமும் அனுமதித்துள்ளது. மேலும் பெங்களூர் மாநகரின் ஆண்டு குடிநீர் தேவை 4.75 டி.எம்.சி மட்டும் தான். அதற்காக 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை கட்டுவது நியாயமல்ல. இதை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் இனி வரும் நாட்களில் எந்த நேரமும் திருப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு. இதைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்க காவிரி தொழில்நுட்பக் குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதைப் போல, மேகேதாட்டு விவகாரத்தை விழிப்புடன் கண்காணிக்கவும், ஆலோசனைகளை வழங்கவும் நீர் மேலாண்மையில் வல்லமை பெற்ற அதிகாரி ஒருவர் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும். இதை உடனடியாக செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் பொதுப்பணித் துறையை இரண்டாகப் பிரித்து நீர்வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், அத்துறைக்கு இன்னும் தனி செயலாளர் நியமிக்கப்படாமல், பொதுப்பணித்துறை செயலாளரே இரு துறைகளையும் கவனித்துக் கொள்கிறார். இது புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றாது. மேகேதாட்டு விவகாரம், நீர் மேலாண்மைத் திட்டங்கள் ஆகியவற்றின் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு வசதியாக நீர்வளத்துறைக்கு தனிச் செயலாளர் ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…