தகைசால் தமிழர் விருது அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது… கி.வீரமணி அறிக்கை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது!
முதலமைச்சருக்கு தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில்
பாராட்டு – நன்றி!

இவ்வாண்டு நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், நீண்ட நாள் – மாணவப் பருவந்தொட்டு, கொள்கை, லட்சியம் இவற்றிற்காகப் போராடி 8 ஆண்டுகளுக்குமேல் சிறைவாசம் செய்தவரும், எளிமையும், தொண்டும் இரண்டறப் பிணைந்த சீரிய தொண்டறச் செம்மலான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு, நேற்று (27.7.2021) நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய தொண்டற அங்கீகார விருதான ‘‘தகைசால் தமிழர் விருது’’ – முதல் விருதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப் பட்டிருப்பது கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
தகுதிமிக்க ஒருவரை இவ்விருதின் முதல் விருதாளராகத் தேர்வு செய்துள்ளது மிகவும் பொருத்தமானதாகும்! அவருக்கு நமது வாழ்த்துகள்!
விருது பெறும் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு அளித்த விருது, தமிழர் ஒருவர் – அவரது மாணவப் பருவம் தொட்டே பொதுத் தொண்டில், சுயமரியாதை இயக்கத்தில் தொடங்கி, பொதுவுடைமை கொள்கையில் பூத்து, காய்த்து, கனிந்து, தொண்டில் பழுத்தவருக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட விருது!
இதனை அறிவித்த உழைப்பின் உருவமாம் – எதனை எப்போது யாருக்குச் செய்வது என்பதில் சரியான முடிவெடுக்கும் ஆற்றல்மிகு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் நமது பாராட்டும், நன்றியும்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
28.7.2021 சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *