எனக்கு எதிரிகள் வெளியில் இல்லை… துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் தற்போது தனக்கு எதிரிகள் வெளியில் இல்லை எனவும் கட்சிக்குள்ளேயே பணம் பெற்றுக் கொண்டு எனக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை தற்போது முன்வைத்துள்ளார்.
மேலும், யார் யாரிடம் அவர்கள் பணம் பெற்றார்கள் என்பது குறித்த விவரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி ஒன்றிய திமுக கிழக்கு கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது, இந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட நான் தபால் வாக்கு மூலமாக மட்டுமே வெற்றி பெற்றேன், என்னுடைய நிலத்தில் விளைச்சலை எடுக்க முடியவில்லை. இது தமிழகத்தின் பல தொகுதிகளில் உள்ளது. அவற்றையும் பொதுச்செயலாளர் என்ற முறையில் கவனித்து வருகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது என்னுடன் இருந்த நண்பர்கள் பலபேர் பணத்திற்கு விலை போய் விட்டார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
யார் யார்? யார் யாரிடம் பணம் பெற்றார்கள் என்ற தொலைபேசி பதிவுகள் என்னிடம் உள்ளது. மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன், என்ன குறைவைத்தேன். நான் இந்தத் தேர்தலுடன் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன், ஆனால் நான் ஓய்வு பெற மாட்டேன் இன்னும் என் கட்சிக்காக நான் அயராது பாடுபடுவேன் என்று அவர் பேசினார்.