சர்ச்சை பேச்சு; காவல் துறையிடம் சிக்கிய பாதிரியார்

கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள், அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால், பாதிரியாருக்கு கண்டனம் வலுத்தது. அவரை கைது செய்ய வேண்டும் எனப் பலர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இன்று அவர் சென்னைக்குத் தப்பிச் செல்ல முயல்வதாக தகவல் வந்தது.
மதுரை கருப்பாயூரணி அருகே சோதனை நடத்திய போது ஒரு காரில் பாதிரியார் இருப்பது தெரியவந்தது. அங்கு அவரை கைது செய்த காவல் துறையினர் கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்து கடவுள்களை அவமதித்து பேசிய பாதிரியாருக்கு, இந்து அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் கடுமையான கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர்.