மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கிய விவசாயிகள்!
கடந்த சில நாட்களாக மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. மேகதாது அணையை கட்டி முடிப்பதில் கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.அதில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பினாலும் கர்நாடக அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இதனையடுத்து, அனைத்துக்கட்சி குழு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி புறப்பட்டுச் சென்று மத்திய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதேவேளையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சென்று சந்தித்துள்ளார். இவ்வாறு மேகதாது அணை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் மேகதாது அணை விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதற்கான தீர்வு என்ன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.