மேகதாது அணைக்கு சாத்தியமில்லை…. துரைமுருகன் பேட்டி!
கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன. அதற்கு முக்கிய காரணம் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு காட்டும் தீவிரமே காரணம்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக குரல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று அதில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக மூன்று தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனால், இவை எதற்கும் கர்நாடக அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில், தமிழக அனைத்து கட்சி குழு இன்று நீர்வளத்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்தது. இந்த அனைத்துக் கட்சிக் குழுவிற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையேற்று வழிநடத்தினார்.
டெல்லியில் அமைச்சரை சந்தித்த பிறகு நீர்வளத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர் பேசியதாவது, மேகதாது அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை. மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை; மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கூறினார். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போகக்கூடாது என்று கூறினார்.