இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுமா? கனிமொழி என்ன சொல்கிறார்

இலங்கையில் இருந்து வந்த அகதிகளுக்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அகதிகள் முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்குமாறு அகதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளூர் நிர்வாகிகள் தூத்துக்குடி எம். பி கனிமொழியை தூத்துக்குடியில் வைத்து நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும், அந்த மனுவில், முகாம்களில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய அரசின் குடியுரிமை வழங்க திமுக வலியுறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவர்களைச் சந்தித்தப் பின்னர் கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “இலங்கை தமிழர்களின் குடியுரிமை குறித்து திமுக, ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. புதிய மீன்பிடி மசோதா சம்பந்தமாக அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது வழக்கம்போல் மாநில அரசுகளின் உரிமைகளை தட்டிப் பறிப்பது போல் உள்ளது.
மாநில அரசுகளின் உரிமைகளை உரிய முறையில் அவற்றுக்கு அளிக்க வேண்டும். தாங்களே முடிவு செய்வோம் என்ற எண்ணத்தில் ஒன்றிய அரசு இருக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.