ஊடகங்களை மிரட்டுவதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்

நாமக்கல்லில் பாஜக சார்பில் நேற்று(16.7.2021) நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ இன்னும் 6 மாதங்களுக்குள் ஊடகங்கள் அனைத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம்” என பேசியிருந்தது சர்ச்சையை ஏறப்டுத்தியுள்ளது.
மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையே இப்படி பேசியுள்ளதற்கு ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஊடகங்கள் விரைவில் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது ஊடகங்களை மிரட்டும் செயல்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த அமைச்சர், ”அண்ணாமலையின் பேட்டி மறைமுகமாக ஊடகங்களை மிரட்டுவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இது ஒரு மிரட்டல் தொனி. ஆகவே இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்று. ஊடகத்துறை என்பது தனித்துவத்தோடு சுயமாகச் செயல்படும் ஒன்று. அது கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அது எங்கள் வசம் வந்துவிடும் என்று சொல்வது மிகத் தவறான ஒன்று. அதை மிரட்டலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது” என தனது கண்டனத்தைப் பதிவி செய்துள்ளார்.