முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தும் மோடி

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் ஏற்பட்ட பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால், மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், தென் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களுடன் ஜூலை 16ஆம் தேதி காலை 11 மணியளவில் மோடி ஆலோசிக்க உள்ளார்.
முதலமைச்சர்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையின் போது, கொரோனா மூன்றாவது அலையைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகளை ஒதுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அதிக தடுப்பூசிகளை ஒதுக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.