150 எம்எல்ஏ-க்களுடன் பாஜக சட்டமன்றத்திற்குள் நுழையும்… அண்ணாமலை பேச்சு!
தமிழக பாஜக தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன் தமிழ் மாநில பாஜக தலைவராக எல்.முருகன் பதவியில் இருந்தார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியில் அமர்ந்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை ஈரோடு குமலன்குட்டை பகுதிக்கு இன்று சென்றிருந்தார். அங்கு பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
பாஜக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை சட்டமன்றத்திற்குள் நுழைவுதான் சிரமம். தற்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், வருங்காலமென்பது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் காலமாக அமையும். ஈரோட்டில் விவசாயிகள், கட்சியின் கொள்கையை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் அதிகளவு இருப்பதால் கட்சியின் மிகப்பெரிய வளர்ச்சி இங்கு இருக்கும்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக 150 எம்எல்ஏ-க்களுடன் சட்டமன்றத்திற்குள் நுழையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
என்னுடைய முதல் வேலை அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு குழுவாக செயல்படுவதுதான். அப்படி செயல்பட்டு பாஜகவை எடுத்துச்சென்றால் மட்டுமே, பாஜகவை ஆட்சியில் அமரவைக்கமுடியும். ஒவ்வொரு நல்ல வேட்பாளரும் நம் கட்சியில் சேரும்போது வெற்றி நிச்சயம். அதேபோல தமிழகத்தில் உள்ள கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சியை கொண்டு சென்றால் வெற்றி நிச்சயம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு நிச்சயம் வரவேண்டும் என்றார்.