தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலா? தடுக்க வலியுறுத்தும் ராமதாஸ்

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஜிகா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டிலும் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியானதாக பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க வேண்டும் என அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா 2வது அலை குறையாத சூழலில் டெங்கு காய்ச்சல் வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் தமிழகத்தில் 2,410 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் கடந்த வாரம் வரை 2,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 28 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கி அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இதை பொதுமக்கள் கடைபிடித்து டெங்கு காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கேரளாவில் பரவி வரும் ஜிகா வைரஸ் தமிழகத்தில் நுழையாமல் தடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.