ஸ்ரீ ரங்கம் கோவில் நிலங்கள் எங்கே? அமைச்சர் சேகர் பாபு தகவல்

இந்துஅறநிலையைத் துறைக்குச் சொந்தமாக தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, இன்று(10.7.2021) ஸ்ரீ ரங்கம் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அமைச்சர், “கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த திருக்கோவில்கள் புனரமைக்கப்படாமல் கும்பாபிஷேக நடத்தப்படாமல் இருந்தது.இனிவரும் காலத்தில் அதுபோன்ற கோவில்களை கண்டறிந்து புனரமைத்து குடமுழுக்கு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலில் உள்ள கோசாலையில் ஆயிரக்கணக்கான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களும் பசுக்களை வழங்கி வருவதால் அருகிலேயே மேலும் ஒரு கோசாலை அமைக்க இடம் தேர்வு செய்வதற்கானப் பணிகள் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் கடந்த 1866-ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கணக்கின்படி 330 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. தற்போது 24 ஏக்கர் நிலம் மட்டுமே திருக்கோவில் வசம் உள்ளது. மீதம் உள்ள நிலங்களில் குடியிருப்புகள் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலம் குறித்த வழக்குகள் சில நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கோவில் இடங்களில் குடியிருப்போர் தாமாக முன்வந்து அதற்கான வாடகை தரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.