தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனமா?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காலை 10.30 மணி அளவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். பிறகு 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார். பிறகு, மாலை 4 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் சந்தித்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு முதன்முறையாக பன்வாரிலால் புரோகித் டெல்லிக்கு சென்றுள்ளார். இதனால், ஆளுநரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆளுநரின் இந்த சந்திப்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை விவகாரம் மற்றும் நீட் தேர்வு குறித்த விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல், சட்டம் – ஒழுங்கு நிலைமை உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், தமிழக ஆளுநரை மாற்றிவிட்டு தமிழகத்திற்கு புதிதாக ஒரு ஆளுநரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஒருபுறம் கூறப்படுகிறது.

டெல்லி பயணம் குறித்து ஆளுநரிடம் கேட்டபோது, ஒரு சில குறிப்பிட்ட விஷயத்திற்காக மட்டும் எனது பயணம் இல்லை என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது, தற்போது அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட யாரேனும் ஒருவர் தமிழகத்தின் அடுத்த ஆளுநராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *