இனி தமிழ் பாடபுத்தகங்களில் ஒன்றிய அரசு என்று தான் குறிப்பிடப்படும்… லியோனி முடிவு

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்,கல்வியியல் பணிகள் மற்றும் கழக தலைவராக ஐ.லியோனியை அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்திருந்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், மேல்நிலை வகுப்பிற்கான தொழிற்கல்விப் பாடப் புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அவற்றை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு மிகக் குறைந்த விலையிலும் வழங்கி வரும் பணியை இக்கழகம் செய்து வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற ஐ. லியோனி, ”இனி தமிழ்நாடு அரசின் பாட புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்குப் பதில் ஒன்றிய அரசு என்று தான் அச்சிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐ. லியோனி பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில், இவரது நியமனத்துக் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *