ராமேஸ்வரத்தில் தர்ப்பணத்திற்கு குவியும் மக்கள்… தொற்று பரவும் அச்சம்

இந்துக்களின் புனித தலமாகக் கருதப்படும் ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க அனைவரும் செல்வது வழக்கம்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கால கட்டத்தில் இங்கு யாரும் செல்லவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரத்திற்கு மக்களின் வருகை அதிகரித்துள்ளது.
இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்துள்ளனர்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் ஒரே இடத்தில் மக்கள் அதிகமாகக் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து நீராடி வருவதால் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, நீண்ட நேரம் நீராட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதேபோல் திருவள்ளூரில் உள்ள வீரராகவ சுவாமி கோயிலில் ஆனி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள இடங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, இந்தக் கோவில்களில் திரண்டுள்ளதால் தொற்று பரவும் அச்சம் நீடிக்கிறது.