3 நாட்களுக்குப் பிறகு சென்னையில் திறந்த தடுப்பூசி மையங்கள்

இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்று தான் தீர்வு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். முதலில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்களிடம் அச்சம் நிலவிய நிலையில், தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கும் சமயத்தில் ஒன்றிய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் வரவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இல்லாததால் கடந்த மூன்று நாட்களாக மூடி இருந்தது. இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக இருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று(8.7.2021) சென்னையில் தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காலை முதலே மக்கள் வந்து மையங்களில் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே, டோக்கன் பெற்றுள்ள பொதுமக்களுக்கு காலை 9 மணி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை 26 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.