விடாப்பிடியாக இருக்கும் தமிழகமும் கர்நாடகாவும்… மத்திய அரசின் முடிவு என்ன?

தமிழகத்துக்கும், கர்நாடகாவிற்கும் காவிரி நீர் பங்கீடு குறித்து பிரச்சனை இன்றும் நீடித்து வருகிறது. இந்நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கிறது.
மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், அணை கட்ட தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என ஸ்டாலினும் நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகனும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் மேகதாது அணை திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதனை கருத்தில் கொள்ளாமல் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அணை கட்டுவதில் இருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைச் சந்தித்துப் பேச நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் துரைமுருகன் இன்று மத்திய அமைச்சரைச் சந்தித்தார்.
மத்திய அரசு திட்ட அறிக்கை கொடுத்து இருப்பதனால் மட்டும் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்றும் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் தமிழகம் அச்சப்பட வேண்டாம் என மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.