நீட் தேர்வை யாராலும் நீக்க முடியாது… எல். முருகன் உறுதி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்களான எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
பிரதமரின் சந்திப்பிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தவர்கள், தமிழகத்தில் உள்ள மகாபலிபுரம் மற்றும் தஞ்சை உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தவும், தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டின் நதி நீர் இணைப்பு பற்றி கோரிக்கை விடுத்தோம் என தெரிவித்தனர். அதற்கு பிரதமர் தண்ணீரை சேமிப்பதற்கான வழிமுறைகளைக் கடைபிடியுங்கள்; மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள் எனத் தெரிவித்ததாக எல். முருகன் தெரிவித்தார்.
கொரோனா பரவலால் நீட் தேர்வு தடை செய்யப்படுமா என்ற கேள்விக்கு எல். முருகன், “நீட் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. நீட்டை தடை செய்ய முடியாது எனத் தெரிந்தும் திமுக தேர்தல் அறிக்கையில் இதை கூறியுள்ளது.
முதல்வரால் நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு மக்களை ஏமாற்றும் செயல். அந்தக்குழு சாதகங்களை ஆராயாமல் குறைகளை மட்டும் தான் ஆராய்ந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.