தொண்டர்களின் உள்குத்து வெளிக்குத்தால் ஆட்சியை இழந்தோம்… முன்னாள் அமைச்சர் பேச்சு!

சமீபத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று நிறைவடைந்தது. அதில் அதிமுக தோல்வி அடைந்து பிரதான எதிர்க்கட்சி எனும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில், தற்போதுமுன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொண்டர்களின் உள்குத்து வெளிக்குத்தாலேயே ஆட்சியை இழந்தோம் என பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் வளாகத்தில், மதுரை மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, மே இரண்டாம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் நடந்தது என்ன, தீர்ப்பு மாறிவிட்டது. மக்கள் அளித்த தீர்ப்பு மக்களின் எண்ண ஓட்டத்திற்கான தீர்ப்பாக இல்லையே என நாம் விவாதிக்கின்ற போதுதான் கட்சிக்குள் உள்குத்து, வெளிக்குத்து இருந்ததாலேயே நாம் ஆட்சியை பறிகொடுக்க நேர்ந்தது என்றார்.
மேலும் பேசிய அவர், நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு இருந்தால் அதிமுக என்ற இயக்கத்தை யாரும் வெல்ல முடியாது. அதிமுகவை வெல்லுகிற சக்தியால் நாம் தோற்கடிக்கப்படவில்லை, அதிமுகவை வெல்லுகிற சக்தி எங்கேயும் இல்லை. எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் மக்கள் நமக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்கள் என தெரிவித்தார்.