இன்னும் கட்டவே ஆரம்பிக்காத மருத்துவ கல்லூரிக்கு ஆரம்பித்த அட்மிஷன்?

மதுரையில், மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என பிரதமர் உறுதியளித்ததைத் தொடர்ந்து அதற்கான இடம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது.
ஆனால், இன்னும் பல காரணங்களால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் கூட தொடங்காமல் இருக்கிறது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனை கல்லூரிகள் இன்னும் கட்டிமுடிக்கப்படாத நிலையில், அவர்களை தற்சமயம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவகல்லூரியிலோ அல்லது மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலோ சேர்த்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மாணவர்களை புதுச்சேரியில் சேர்ப்பதும் தனியார் கல்லூரிகளிலும் சேர்ப்பது நன்றாக இருக்காது என்பதால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மாணவர்களை தேனி, சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிரித்து சேர்க்க ஆலோசனை நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து, ஆலோசிக்கப்பட்டு இறுதியான முடிவு எடுக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.