புதிய டிஜிபி சைலேந்திர பாபு பதவியேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜே. கே. திரிபாதியின் பதவிகாலம் இன்றுடன்(30.6.2021) முடிவடைகிறது.
இதனையடுத்து, புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றுள்ளார். புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திர பாபுவிடம் ஜே. கே. திரிபாதி பொறுப்புகளை முறையாக ஒப்படைத்தார்.
சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் பதவியேற்ற பின் சைலேந்திர பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ”காவல்துறையின் தலைமை பொறுப்பை வகிப்பது என்பது அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.
தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பேணிக்காக்க முன்னுரிமை வழங்கப்படும்.
மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், காவல்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். மேலும், முதல்வரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ளார்.