தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த கோரிக்கை விடுக்கும் அர்ஜூன் சம்பத்

இந்தியாவில் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீ தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் எனப் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், “ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறப்பவர்களுக்கு முறையான சான்றிதழை வழங்கப்படுவதில்லை.
இதனால், அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிவாரணம் முழுமையாகக் கிடைக்காமல் போகலாம். எனவே, சான்றிதழ்களை முறையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16 ஆவது சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் ஜெய்ந்ஹிந்த என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதது கண்டிக்கத்தக்கது. அதேபோல, சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியின் பெயரை நீக்கியதும் கண்டிக்கத்தக்கது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளது. மாணவர்க்ளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலும் நீட் தேர்வை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது குறித்து ஆளுநர் அறிக்கையில் இடம்பெறவில்லை. அதற்கு அரசு விளக்கமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.