எங்களுக்கு வாக்களிக்களிக்காதவர்கள் வருந்தும் அளவிற்குச் சேவை செய்வோம்…முதலமைச்சர் விளக்கம்

தமிழகத்தின் 16 ஆவது சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், பேசிய பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் அதிக வருவாயை ஈட்டித் தரும் கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பது குறித்து ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
அது பாஜக வெற்றி பெற்றத் தொகுதி என்பதால் திமுக அரசு அதை புறக்கணிக்கிறதா? இதில், முதலமைச்சர் அனைவருக்குமான அரசு என கூறிக்கொள்கிறார்” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கோவையை எந்தெந்த வகைகளில் இந்த அரசு புறக்கணிக்கிறது என்று சொன்னால், அதற்கு பதில் அளிக்கலாம். `வாக்களித்தவர்கள் பெருமைப்படும் அளவுக்கும், வாக்களிக்காதவர்கள் திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படும் அளவுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கும்’ என்று தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே தெரிவித்தேன்.
இன்னும் சொல்லப்போனால், வாக்களிக்காத மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுக்குத்தான் அதிகம் செய்வோம். அப்படித்தான் இந்த அரசின் செயல்பாடுகள் இருக்கும். கோவையை திமுக அரசு புறக்கணிக்கவில்லை” என விளக்கமளித்துள்ளார்.