சிங்காரச் சென்னை 2.0… ஆளுநர் அதிரடி

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதிவேற்றார். சட்டப்பேரவைத் தலைவராக அப்பாவு மற்றும் துணைத் தலைவராக கு, பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இன்று(21.6.2021) கலைவாணர் அரங்கில் 16 ஆவது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது.
அப்போது, உரையாற்றிய ஆளுநர், “முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 335 கோடி ரூபாய் குவிந்துள்ளது. கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற் நிறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக 10 ஆயிரத்து 68 கோடி ரூபாயை புதிய அரசு பதவியேற்றதிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த தமிழகத்தின் வெள்ளை அறிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். வெள்ள கட்டுப்பாடு முறைகளை வகுக்க அதில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல் துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.
காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மதுரவாயல் – சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்ட சாலை திட்டத்தை விரைவு படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும் முதல் கட்டத்தை போலவே 50:50 செலவு பகிர்வு அடிப்படையில் ஒன்றிய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை விரைவாக வழங்க வேண்டும் என்று இந்த அரசு வலியுறுத்தும் . சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 புதிய திட்டம் செயல்படுத்தப்படும்” எனப் பேசியுள்ளார்.