டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை… அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து, உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டது.
தமிழகத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸால் அதிக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ” தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர்.
அதனால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது எடுத்த முடிவுகளை தான் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மீண்டும் யாருக்காவது டெல்டா பிளஸ் கொரோனா ஏற்பட்டால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய புதிய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
மூன்றாவது அலைக்கு தயாராகும் விதமாக 2-வது அலையில் உருவாக்கப்பட்ட படுக்கைகளின் கட்டமைப்பு தொடர்ந்து செயல்படும். பொது நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.