படப்பிடிப்பை நடத்த அனுமதியளித்த முதலமைச்சருக்கு பாரதி ராஜா நன்றி

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகப் போடப்பட்ட ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, திரைப்படம் மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகளை 100 பேருடன் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்குத் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்த வகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறோம்.

நம் மண்ணின் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள். கொரோனா காலகட்டத்திலும் தீவிரச் செயலாற்றி அதன் எண்ணிக்கையை உதிர்த்தது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முனைப்பெடுக்கும் இந்த அரசின் செயல்பாடுகளை மிகவும் ரசிக்கிறோம்.

சீரிய வேகத்தில் செயலாற்றும் முதல்வருக்கும் துறை சார்ந்த அரசு இயந்திரத்திற்கும் எம் நன்றிகள்.

கட்டுப்படுத்தப்பட்ட இக்கொரோனா காலகட்டத்திலிருந்து மக்கள் இயல்பை நோக்கித் திரும்ப கவனமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் வேளையில் திரைத்துறையும் மீளத் தளர்வுகள் அறிவித்தமைக்கு நன்றிகள்.

முடங்கிக் கிடந்து திரையரங்குகள் இல்லாமல் தவிக்கும் எம் படங்கள் ஒருபுறம். பாதி படப்பிடிப்பை முடித்து மீதி முடிக்க காத்திருக்கும் படங்கள் ஒருபுறம் எனப் பத்து மாதம் சுமக்க வேண்டிய குழந்தையை இரண்டு வருடங்கள் சுமந்தது போன்ற வலி மறுபுறம் என இருந்த நிலைக்கு உங்கள் அறிவிப்பு பெருமலர்ச்சியைத் தந்திருக்கிறது.

படப்பிடிப்பை நடத்திக்கொள்ளத் தந்த அனுமதி எங்களுக்கு மீண்டும் உயிர் பெற்றது போல உள்ளது.

மேலும், இயல்பு நிலை திரும்பும் தருணத்தில் தாங்கள் திரையரங்குகளையும் திறந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் தயாரிப்பாளர்களும் வழிகாட்டல் நடைமுறையைப் பின்பற்றி கொரோனா நோய்த் தொற்றை முறியடிக்கும் விதமாக தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவோம் என உறுதியளிக்கிறோம்.

செய்த அனைத்து நல்லவைக்கும் நன்றிகளைத் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…