மூன்றாவது அலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஓபிஎஸ் வேண்டுகோள்
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் அதிகரித்து வந்த பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனாலும், கொரோனா மூன்றாவது அலையும் தமிழகத்தைப் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், கொரோனா மூன்றாவது அலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும் மூன்றாவது அலையின் தாக்கம் தவிர்க்க முடியாதது என்றும் இரண்டாவது அலையைவிட மூன்றாவது அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் விஞ்சானிகள் எச்சரிக்கை விடுத்து வருவதாக வருமுன் காப்போம் என்பதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்.
இதுமட்டுமல்லாமல், மூன்றாவது அலையை தடுக்கும் நோக்கில், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தல், கொரோனா உறுதியானவர்களின் இருப்பிடம் அறிந்து, அவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துதல், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை 14 நாள்கள் விலக்கி வைத்தல், முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குதல், சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில் பயணத்தில் கட்டுப்பாடுகளை விதித்தல், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்த்தல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிப்பதும் மிக அவசியம்.
எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, மூன்றாவது அலை ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை வாரமலிப்பதற்காக கட்டுப்பாடு பொதுமக்களிடத்தில் தான் இருக்கிறது என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.