மூன்றாவது அலையையும் எதிர்கொள்ளத் தயார் – மா. சுப்பிரமணியன்

திருவாரூர் மாவட்டத்தில் கல்யாணமகாதேவி கொரோனா தடுப்பூசி போடும் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். அங்கு, தடுப்பூசி போட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழையும் வழங்கினர்.
பின்னர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தமிழகம் தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் 40,000 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படிக்கைகள் தயாராக இருக்கிறது.
அனைத்து தனியார் சேவை மையங்கள், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்பட அனைத்து இடங்களில் 1 லட்சம் படுக்கைகள் தயாராகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகளும் தயாராகி வருகிறது.
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைவருக்கும் இரண்டு தவனை தடுப்பசி போடுவதற்கு 11. 36 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவை. தற்போது 1,16,57,690 தடுப்பூசிகள் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.