மதுவின் பாதிப்பிற்கு இதுவே சான்று… மதுக்கடைகளை நிரந்தரமாக மூட கோரிக்கை விடுக்கும் அன்புமணி

தமிழகத்தில், கொரோனா ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தொற்று பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகளுடன் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 14 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறப்பது தொற்று பரவலை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவே, மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளான திங்கட்கிழமை குடிபோதையில் நடந்த மோதல்களில் சென்னையில் இருவர், மதுரையில் மூவர் என 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் குடிபோதை கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!
மது கொரோனாவைப் பரப்புவது மட்டுமின்றி, கொலைகளுக்கும் காரணமாக இருப்பது மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே உறுதியாகிவிட்டது. அடுத்து வரும் நாட்களிலும் அனைத்து வகை குற்றங்களும் அதிகரிக்க மதுவே முதன்மைக் காரணமாக இருக்கப் போகிறது!
மது அனைத்து வழிகளிலும் அழிவு சக்தி தான்… எந்த வகையிலும் ஆக்க சக்தி கிடையாது. எனவே, தமிழக அரசு கவுரவம் பார்க்காமல் மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளனர்.