ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது நியாயமா? தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்திருந்த நிலையில், மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக தொற்று பரவல் குறைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் மதுக்கடைகளைத் திறக்க அரசு அனுமதியளித்தது. நேற்று (14.6.2021) காலை 10 முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்பட்டது.
கடை திறந்தது முதலே விற்பனை படுஜோராக நடைபெற்றது. பாதுக்காப்பு விதிமுறைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் 164 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு தமிழ்நாட்டில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து அன்புமணி ராமதா, கடை திறந்த ஒரே நாளில் இவ்வளவு கோடி விற்பனையாகிறதென்றால் அந்த அளவிற்கு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு.
தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு கடைகள் தான் திறந்துள்ளன என்றாலும் வணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரு மடங்கு நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு.
கொரோனா நிதியுதவியாக ரூ.4200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்கவுள்ளது. ஆனால், தினசரி 165 கோடிக்கு மது விற்றால் ஒரு மாதத்தில் ரூ.5000 கோடியை மக்களிடமிருந்து மதுவைக் கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்?
மக்கள் நோயின்றி, குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவது தான். அதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.