ஊரடங்கிலும் தொற்று குறையாத மாவட்டங்கள்!
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலைப் பாதிப்பை குறைப்பதற்காக அரசு சார்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக தொற்று அதிகம் இருந்த பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை தேசிய தொற்று நோய் ஆய்வு நிறுவன இயக்குநர் மனோஜ், வேலூர் சிஎம்சி மருத்துவமனை தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ், டாக்டர் குழந்தைசாமி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், “கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்தும் தடுப்பூசி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஊரடங்கினால் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா தொற்றின்பாதிப்பு குறைந்திருக்கிறது. ஆனால், ஊரடங்கிலும் தொற்று குறையாத 9 மாவட்டங்களில் நுண் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்தார்.