பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிப்பு…விளக்கம் கேட்கும் மனித உரிமைகள் ஆணையம்!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களான குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி கணேசனின் மனைவி பிரியதர்ஷினி, பிரசவத்துக்காக தஞ்சை ராஜா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 25 ம் தேதி அவருக்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாய் பால் ஊட்டக் கூடாது என்பதால் குழந்தையின் இடது கையில் பொருத்தப்பட்டிருந்த மருந்து ஏற்றும் சாதனம் மூலம் திரவ உணவு வழங்கப்பட்டு வந்தது. உடல் நலம் பெற்ற குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும் போது குழந்தையின் இடது கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்திரியை நர்ஸ் கத்திரிகோலால் வெட்டியுள்ளார். இதில் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து, குழந்தையின் விரல் தையல் போட்டு சேர்க்கப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவம் நர்ஸின் அலட்சியத்தால் நிகழ்ந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செய்தித்தாளில் இந்த செய்தி வெளியானதையடுத்து தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *