இனி கோயில்களில் தமிழில் தான் அர்ச்சனை நடக்க வேண்டும்…அமைச்சர் அதிரடி
தமிழகத்தில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மே 6 ஆம் தேதி, முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார்.
பதவியேற்றது முதல் அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அவரின் கீழ் பதவியேற்றுக் கொண்ட 33 அமைச்சர்களும் அவரவர் துறைகளில் பல சீர்திருத்தங்களைச் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், கோயில் நிலங்களை அபகரித்து வைத்திருப்பவர்களிடம் இருந்து அந்த நிலங்களை அரசு கைப்பற்றி வருகிறது.
சென்னையில் வடபழனி கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தமிழக அரசு மீட்டுள்ளது.
சாலிகிராமம் காந்தி நகரில் தனியார் வளாகங்கள், கால்வாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மீட்டுள்ளது. மீட்கப்பட்ட கோவில் நிலங்களை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று பார்வையிட்டார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு பதவியேற்ற 30 நாட்களிலேயே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது வெறும் ட்ரெய்லர் தான்.
இனி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் தான் அர்ச்சனை நடத்த வேண்டும். அப்படிச் செய்யாத கோவில்கள் கண்டறியபட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.