தையல் இயந்திரம் கேட்ட பெண்ணுக்கு உயர்கல்விக்கு உதவிய அமைச்சர்…மாணவி நெகிழ்ச்சி
தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சமீபத்தில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் பொதுமக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பழங்குடியின மாணவி சந்திரா, தான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும் அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் தன் வாழ்வாதாரத்திற்காக ஒரு தையல் மிஷின் வாங்கிக் கொடுத்து உதவ வேண்டும் என மனு அளித்தார்.
அதைப் பார்த்த அமைச்சர், “தையல் மிஷின் வாங்கித் தருகிறேன். ஆனால், உன் வாழ்க்கை தையல் இயந்திரத்திலேயே முடிந்து விடும். எனவே, மேலே படிக்க உதவி செய்கிறேன் படி. படித்து நான்கு பேருக்கு நீ முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என கூறினார்.
இது குறித்து மாணவி சந்திரா, ”எங்கள் இனத்தில் பள்ளிப்படிப்பை கூட பலர் மேற்கொள்ளாத சூழலில் நான் 12 வது வரை படித்துவிட்டு மேலே படிப்பதற்கு வசதி இல்லாமல் இருந்தேன். எனது வாழ்வாதாரத்தை காப்பதற்காக அமைச்சரிடம் தையல் மிஷின் வேண்டும் என மனு கொடுத்தேன்.
அமைச்சர் அவர்கள் என்னை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார். நான் கல்லூரிக்கு சென்று படிக்கப்போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என நெகிழ்ச்சியாகக் கூறினார்.
உயர்கல்வியைத் தொடர்வழியில்லாமல் தையல் இயந்திரம் கேட்டப் பெண்ணுக்கு, படிக்க உதவி செய்கிறேன் படித்து நான்கு பேருக்கு உதாராணமாக இரு எனக் கூறி நம்பிக்கை ஊட்டிய அமைச்சரின் செயலுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.