முதலமைச்சருக்கு ஓபிஎஸ் நன்றி

அதிமுகவின் துணை ஒருங்கிணைபாளர் ஓ. பன்னீர்செல்வம் 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியை 2,457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கினார்.

இந்நிலையில், தனது கோரிக்கையை ஏற்று போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிய முதலமைச்சருக்கு ஓபிஎஸ் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முந்தைய ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக நடைமுறைப்படுத்த இயலாததை சுட்டிக்காட்டி, தேர்தல் முடிந்த தற்போதைய நிலையில், அவற்றை ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 31-5-2021 நாளிட்ட எனது அறிக்கையின் வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனது வேண்டுகோளினை ஏற்று, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையினை 2-6-2021 அன்று நிறைவேற்றியிருக்கிற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *