மறைந்த தலைவர் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் தொடக்கம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக தலைவரின் பிறந்தநாளை தொண்டர்கள் அனைவரும் வீட்டில் வைத்தே கொண்டாடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, எளிமையாக வீட்டில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின், அவர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கும், மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கும் சென்று மரியாத செய்ய உள்ளார்.
தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் மரக்கன்றுகள் நட உள்ளார்.மேலும், பல நலத்திட்ட உதவிகளையும் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதனுடன் 14 மளிகைப் பொருட்களுடன் கூடிய தொகுப்பை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, ஊதியமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்படுகிறது.
மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய், மருத்துவர், மருத்துவப் பணியாளர், காவலர், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.