செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தொடங்க உத்தரவிட உயர்நீதி மன்றம் மறுப்பு

கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க தடுப்பூசி இன்று தான் வழி என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனாலும், மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் வராததால், தமிழ்நாட்டில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலையேற்பட்டுள்ளது.
இதனால், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தைத் திறந்து உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வெர்னிகோ மேரி என்பவர் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ”செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பாடு தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டாமா? மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க அவகாசம் வழங்க வேண்டாமா? ”என மனுதாரரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ”இந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசு பரிசீலிக்கும் என நீதிமன்றம் நம்புவதாக கூறிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது ” எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.