முதலமைச்சரின் 6 முக்கிய அறிவிப்புகள்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சங்கம் வளர்த்த மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் புதிய நூலகம் கட்டுவது உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளின் விவரம் குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

1. சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிலைய வளாகத்தில் ரூ.250 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

2. சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நினைவு நூலகம் ரூ.70 கோடி செலவில் அமைக்கப்படும்.

3. கலைமாமணி விருதை போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்படும். ஆண்டுதோறும் 3 எழுத்தாளர்களுக்கு இலக்கியமாமணி விருதுடன் பாராட்டுப் பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

4. தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

5. திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் ஏற்படுத்தப்படும். இதில், 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகளுக்கு மட்டும் ரூ.24.3 கோடி ஒதுக்கப்படும்.

6. மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை நடைமுறையில் உள்ளதுபோல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்கப்படும். ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *