கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைப்பது மக்களின் கைகளில் தான் இருக்கிறது – முதலமைச்சர்

கொரோனா பாதிப்பின் பரவலைக் குறைக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அதில், “

கொரோனா நோய் தொற்று ஒருவரிடம் இருந்துதான் மற்றொருவருக்கு பரவுகிறது. அதனால் நோய் தொற்று தங்களுக்கு பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். அதே போல நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும். தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட முடியும்.

கடந்த மே 24 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அது தற்போது மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் பாதிப்பு அதிகரித்து வந்தது. அதுவும் இந்த வாரம் குறையத் தொடங்கி இருக்கிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கும் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முழு ஊரடங்கு காரணமாக மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மக்களை நோக்கி காய்கறிகள், மளிகை பொருட்கள் வந்துசேர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக குறிப்பிட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவது உண்மைதான்.

அதன் காரணமாகத்தான் நிவாரண நிதியாக முதற்கட்டமாக 2,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்த 2,000 ரூபாயும் வழங்கப்படும். இதை பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூட பாராட்டியிருக்கிறார். இருந்தாலும் ஊரடங்கினை நீடித்துக்கொண்டே செல்லமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக தற்போது படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. படுக்கை தட்டுப்பாடு என்பது தற்போது தமிழகத்தில் இல்லை. அதே போன்று ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்ற நிலைமையும் தமிழகத்தில் இல்லை. ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். தமிழகம் அளவுக்கு வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்யப்படவில்லை. தமிழக மக்களை காக்கவே என்னை நான் ஒப்படைத்துக் கொண்டுள்ளேன்.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வாரங்கள் தான் ஆகிறது. பல்வேறு துறைகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு தடையாக இருக்கும் இந்த கொரோனாவை விரைவில் வீழ்த்துவோம். அதன் பிறகு பல்வேறு துறைகளிலும் புதிய நடவடிக்கைகள் எடுத்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம். நமக்கான வளமான தமிழகத்தை அமைப்போம்” என உரையாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *