போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் சென்ற பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த எழுவர் விடுதலை குறித்து, குடியரசுத் தலைவருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

நாடெங்கும் தற்போது, பரவி வரும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க சிறைக் கைதிகளுக்கு தேவைப்பட்டால் பரோல் வழங்க வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி.பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே 18 அன்று முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஏற்று முதலமைச்சரும் மே 19 ஆம் தேதி பேரறிவாளனுக்கு,  உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க அனுமதியளித்தார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை புழல் சிறையில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்குச் சென்றுள்ளார்.

பரோலில் உள்ள பேரறிவாளன் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது, கூட்டங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட சிறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *