ஸ்டெர்லைட் போராட்டத்தில் வைகோ, நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்கள் மீதுள்ள வழக்குகளும் வாபஸ்! முதலமைச்சர் அதிரடி

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பலர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட குறிப்பிட்ட வழக்குகளைத் தமிழக அரசு கடந்த 21-ம் தேதி வாபஸ் பெற்றது. அச்சமயத்தில் கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்குக் காயம், மன உளைச்சல் ஏற்பட்டதைக் கருதி, நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக வைகோ, நல்லகண்ணு, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 13 தலைவர்களின் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி, நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, ஏற்பட்ட வன்முறையின் காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, தமிழ்நாடு முதல்வரிடம் 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் 21-5-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டார்.
அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக மாநில துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தற்போதைய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அழகு முத்துபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜா, அமமுக மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ், இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பூமயில், ஆம் ஆத்மி கட்சியின் துணைச் செயலாளர் ஆர்டர் மச்சோடா, திமுக ஒன்றியச் செயலாளர் பாலசிங் ஆகியோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது‘ என உத்தரவிட்டுள்ளது.