இந்த ஆட்சியிலாவது பேருந்து நிலையம் கிடைக்குமா? 30 ஆண்டுகளாக காத்திருக்கும் மக்கள்
திண்டிவனத்தில் 1991 ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த கரியாலி தெரிவித்திருந்தார். ஆனால், அது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்தது. தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த சி.வி. சண்முகம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முயன்றார். அதற்கு அப்போதைய அதிமுக நகர்மன்ற தலைவர் ஹீராசந்த் எதிர்ப்பு தெரிவித்த்தால் முருகம்பாக்கம் ஏரி அருகே நகராட்சிக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை வாங்கிஅதை புதிய பேருந்து நிலையத்திற்கு பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
பின்னர், மாதம் 60 ஆயிரம் ரூபாய் வாடகையில் 30-12-2005 அன்று தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 33 நாட்கள் இயங்கியது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவினர் மாதாமாதம் ரூ.60 ஆயிரம் வாடகை தர முடியாது என கூறி வேறு இடம் பார்க்க தொடங்கினார்கள். வேறு இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்படும் என திமுக நகராட்சி அறிவித்தது.
இப்படியே 2017 வரையிலும் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர், ”திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும்” என, உறுதியளித்துள்ளார்.