தமிழை புறக்கணிக்கிறதா மத்திய அரசு?
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி, மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. அதில், கல்வியில் மாணவர்களுக்கு பல புதிய விதிமுறைகள் அமல்படுத்தபட்டிருந்தது.
இளங்கலை படிப்பில் சேர்வதற்குக் கூட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது.
முதலில், இந்த கல்விக் கொள்கை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனால், அனைத்து மக்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, அசாமி, போடோ, கன்னடம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசியக் கல்விக் கொள்கை மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழில் மட்டும் வெளியிடப்படவில்லை. மத்திய அரசின் இந்த போக்குக்கு தமிழ் ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.