சிவகாசியில் மேலும் ஒரு வெடிவிபத்து! ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. அந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாகி விட்டது.
சிவகாசியை அடுத்த காக்கிவாடன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென உராய்வு ஏற்பட்டு, மூலப்பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து விழுந்தன.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி தர்மலிங்கம் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை சக ஊழியர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மாரனேரி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.