மதுரையில் ஆசிட் ஊற்றி மாடுகள் விரட்டியடிப்பு
மதுரையில் ஆசிட் ஊற்றி விரட்டியடிக்கப்பட்ட 2 காளை, ஒரு பசு மாடு உடலில் பலத்த காயத்துடன் ஒரு மாதமாக பரிதவித்து சிகிச்சைக்காக ஏங்கி தவித்து வருகின்றன. மதுரை சூர்யா நகர் பகுதியில் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இந்த மாடுகளில் 2 காளை மாடு, ஒரு பசு மாடு மீது கடந்த ஒரு மாதம் முன்னதாக சிலர் ஆசிட் உள்ளிட்ட ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி விரட்டியடித்துள்ளனர். இதில் அந்த மாடுகளின் வயிற்று பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது, தற்போது 3 மாடுகளுடன் அந்த காயத்துடன் பரிதவித்து வருகின்றன.
எனவே விலங்கு வதை தடுப்பு ஆர்வலர்களோ, கால்நடை மருத்துவர்களோ இந்த மாடுகளுக்கு முறையான சிகிச்சை வழங்கி, இதன் உயிரை காப்பாற்ற முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சூர்யா நகர் குடியிருப்போர் கூறுகையில், பலமுறை தன்னார்வ அமைப்பினர், அரசு அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவில்லை. விலங்குகளை பாதுகாக்கும் மனித நேயம் இல்லாதது கவலையளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம், இந்த மாடுகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.